மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) அமைப்பின் ஏற்பாட்டில் முசலி பிரதேச பெண்கள் வலையமைப்புக்கான கருத்தரங்கு இன்று (07.09) ,வியாழன் காலை 10.45 மணியளவில் சிலாவத்துறை, கோட்டக்கல்விப் பணிமனை கேட்போர் கூடத்தில் ஆரம்பித்தது.
இதில் கிராம மட்டத்தில் இருந்து வலய மட்டமாக்கப்பட்ட பெண்கள் குழு உறுப்பினர்கள் 59 பேர் கலந்து கொண்டனர். இதன்போது பெண்கள் மற்றும், சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக, கலந்துரையாடப்பட்டு அவற்றை எவ்வாறு கையாள்வது மற்றும் வெளிக்கொணர்வது என்பது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட மன்னார், நானாட்டான் பிரதேச செயலகத்தில் பணி புரியும் உளவளத்துணை ஆலோசகர் திருமதி வெலன்டினா மயூரன் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் பற்றிய அறிவுரைகளை வழங்கியதோடு, ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படும் போது ஏற்படும் உடற்காயங்களை மறைக்காது , அந்தச் சிறுமி இருக்கும் நிலையிலேயே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படல் வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் சமூகத்திற்குப் பயந்து குடும்பங்களில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை மறைத்தல் அவ்வாறான குற்றங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகையில் பயமின்றி காவல் நிலையங்களில் அமைந்திருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புப் பிரிவில்சென்று முறையிடுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் பங்கேற்ற பெண்களினால் இவ்வாறான கலந்துரையாடல்களைத் தங்கள் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடாத்தும்படி கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
-ரோகினி நிசாந்தன்-
மன்னார் செய்தியாளர்.