மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
மொரோக்கோவின் ஹை அட்லஸ் மலைத்தொடர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது.
பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேச்சில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர்கள் (44.7 மைல்) மையத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எவ்வாறாயினும் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் நிலவுவதாகவும், பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்வுக்கூறப்படுகிறது.