அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு : தயார்படுத்தல்களுடன் ஐ.ம.ச!

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12.09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டின் சகல துறைகளும் சரிந்துபோயுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு நாட்டின் பெருன்பான்மையினர் பட்டினியில் இருக்கின்றனர்.மக்கள் வாழ்வதற்கான போராட்டதை முன்னெடுத்துள்ளனர். சுகாதாரத்துறை முற்றிலுமாக சரிந்து விட்டது. இதற்கான காரணங்களை நாம் பாராளுமன்றத்தில் முன்வைத்தோம்.

நாட்டு மக்கள் இன்று புதிய ஆட்சியையே எதிர்பார்க்கின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சூழ்ச்சியால் ஆட்சிக்கு வந்தமை இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அரசாங்கம் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்ததாக சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. சூழ்ச்சியினாலையே கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக சர்வதேசம் இன்று கூறுகின்றது. நாட்டின் புலனாய்வு பிரதானிக்கு முறைபாடுகள் குற்றங்கள் எழுந்துள்ளன.

எனவே நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை, நாட்டிற்கு பொறுப்பான நிர்வாகம் தேவை. இந்த ஆட்சியை பொறுப்பேற்க சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஏனைய கட்சிகள் தேர்தல் தொகுதிக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது மாத்திரமே. நாம் நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் தொகுதிக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டோம்.

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினையும் கிராமத்திற்கு கிராமம் செல்லும் புதிய வேலைத்திட்டத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.

.அன்றைய தினங்களில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் மாவட்டத்திற்குச் சென்று புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல்,வாக்காளர் பிரிவு கிளைகள்,மகளிர் பிரிவுகள்,இளைஞர் பிரவுகள்,பிக்குகள் முன்னணியின் பிரிவுகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்தடுத்த மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவோம். நாங்கள் வெற்றியை தனதாக்குவது இவ்வாறே.

நாட்டை கட்டியெழுப்புவதே ஐக்கிய மக்கள் சக்தியின் குறிக்கோள். அந்த இலக்கை வெல்வதற்கான பிரச்சாரம் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்கக் கூடிய எந்தவொரு தரப்பும் ஆளும் தரப்பில் இல்லை. பொதுஜன பெரமுனவிற்கு கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்து பேசுவதில் அர்த்தமில்லை.மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரமான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி நினைக்கும் போதே அவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது.

மகளிர் சக்தி,இளைஞர் சக்தி,கிளைச் சங்கம் மட்டுமின்றி,பிக்குகள் ஆலோசனை சபை,சர்வமதத் தலைவர்கள் ஆலோசனை சபை,தொழிற்சங்க இயக்கங்கள்,சார்புடைய அமைப்புகளாலும் கட்சியைப் பலப்படுத்துவோம். அடுத்த வருடம் தேர்தலுக்கான வருடமாகும். எந்நேரத்திலும் தேர்தலை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சனல் -04 வெளியிட்ட காணொலி குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளும், அதற்கு அமைச்சர் வழங்கிய பதிலும் வருமாறு,

கேள்வி -சனல் 4 இன் அறிக்கை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன?

பதில்-உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாட்டில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. மலல் கொடா ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.அவை காகிதங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உண்மைகள் இதுவரை வெளிவரவில்லை.

பல சர்வதேச புலனாய்வு முகவரான்மை அமைப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வந்தன. இலங்கையில் நடைபெறும் விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு கோருகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களே இந்நாட்டு பாதுகாப்புப் படைகளில் தற்போது உள்ளனர்.

கேள்வி – கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன?

பதில்-கோட்டாபய ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட ஒருவர். நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கி விவசாயத்தை முற்றாக நாசமாக்கிய கோட்டாபய மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கோட்டாபயவை நிராகரித்துள்ளனர்.

கேள்வி -சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு என்ன நடந்தது?

பதில்-சுகாதார அமைச்சில் இடம்பெற்று வரும் மோசடி மற்றும் ஊழலை வெளிப்படுத்த வேண்டியது அவசியமே அதனூடாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு அமைச்சரோ, அரசாங்கத்தாலோ பதில் சொல்ல முடியவில்லை.நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை இழக்க நேரிடும். நோய்வாய்ப்பட்டவர்கள் இறக்கும் போது நடக்கும் திருட்டைப் பார்த்தும் தங்கள் உறுப்பினர் பதவியை பாதுகாக்க வாக்களித்தனர்.

கேள்வி -ஐக்கிய மக்கள் சக்தியின் குழு ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என ஐக்கிய தேசியக் கட்சி பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதே?

பதில்-தற்போதைய ஜனாதிபதி,ஜனாதிபதி பதவிக்கு வந்த நாள் முதல் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இவ்வளவு பேர் வருகிறார்கள் அவ்வளவு பேர் வருகிறார்கள் என சொல்ல ஆரம்பித்தார்கள்.ஆனால் யாரும் செல்லவில்லை. போக நினைத்தவர்களும் இப்போது நின்றுவிட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஐ.தே.கட்சியையும் மொட்டுக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்க குழப்பியுள்ளார் என்பது அவர்களுக்குத் தெரியும். நாங்கள் 26 வருடங்கள் ரணிலுடன் இருந்தோம். அவரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை.ஒன்றிரண்டு பேர் போனாலும் இப்போது அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாதுள்ளனர்.

Social Share

Leave a Reply