உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் கண்காணிக்கப்படும் சுயாதீன விசாரணைக்கு நேற்று (13.09) கொழும்பு உயர்மறைமாவட்ட தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 விடுத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி புதிய குழுவொன்றை நியமிப்பார் என தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தெரிவுக்குழுவும் இதற்கு முன்னரே நியமிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் இந்த குழுக்கள் தாம் விரும்பிய நீதியான முடிவுகளை கொண்டுவரவில்லை எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
எனவே, சேனல் 4 இன் குற்றச்சாட்டுகள் மற்றும் முந்தைய விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டவை அனைத்தையும் விசாரிக்க ஒரு சுயாதீன அமைப்பு நியமிக்கப்பட வேண்டும் என்று தாம் முன்மொழிவதாகவும், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட அமைப்புகள் புதிய விசாரணையை கண்காணிக்க அனுமதித்து, பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.