இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையில் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நான்கு நாட்கள் போட்டியில் இன்று(14.09) இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் 19 வயது அணியை, இலங்கை 19 வயது அணியின் சிறந்த பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தியது. ஆரம்ப இணைப்பாட்டமாக 57 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதும், மிகுதி விக்கெட்கள் 70 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. ஜோர்டான் ஜோன்சன் 52 ஓட்டங்களையும், ஸ்டீபன் பஸ்கால் 28 ஓட்டங்களையும், ஸ்டீவ் வெடேர்பன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்களான விகாஸ் தேவ்மிகா 5 விக்கெட்களையும், மல்ஷா தருப்பதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-0 என தொடரை வென்றுள்ளது.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயது அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மல்ஷா திருப்பதி 70 ஓட்டங்களையும், ருஷாந்த கமகே 58 ஓட்டங்களையும், ரவிஷான் டி சில்வா 43 ஓட்டங்களையும், புலிந்து பெரேரா 41 ஓட்டங்களையும் பெற்றனர். ஷாருஜன் சண்முகநாதன் 36 ஓட்டங்களையும் பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் நேதன் சீலி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இரண்டாம் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 19 வயது அணி சகல விக்கெட்களையும் இழந்து 277 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோர்டான் ஜோன்சன் 157 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் விகாஷ் தேவ்மிகா 03 விக்கெட்களையும், மல்ஷா தருப்பதி 02 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
79 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி 03 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் சினெத் ஜெயவர்தன 30 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.