மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க்!

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் அழைப்பினையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது சமூக வலயத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், தமக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இன்று (14.09) இடம்பெற்றது.

இ.தொ.கா வின் சர்வதேச விவகார பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, மற்றும் அமைச்சர் ஜீவனின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மலையக தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்காக இ.தொ.கா முன்னெடுத்த போராட்டங்கள், மலையகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி, காணி உரிமை உட்பட எனது அமைச்சின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும், அதற்கு ஐ.நா. மற்றும் அதன் கீழ் இயங்கும் கிளை அலுவலகங்களின் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது சம்பந்தமாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் ஜீவனின் அழைப்பையேற்று நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஐ.நா. வதிவிட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

Social Share

Leave a Reply