இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு அதிகமாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் ரசிகர்களோடு போட்டி நடைபெறுகிறது. ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் போட்டியாக இந்தப் போட்டி மாறிப்போனது.
மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று மிகவும் அரிதாகவே காணப்பட்ட போதும் போட்டி ஆர்மபிக்க 10 நிமிடங்களுக்கு முன்னர் பெய்த மழையினால் போட்டி 40 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்தது. இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பு பற்றி கதைக்கவே தேவையில்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களை’மட்டுமே பெற்றது. இலங்கை அணியின் இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். தென்னாபிரிக்க அணிக்கெதிராக 43 ஓட்டங்களை பெற்றமையே குறைந்த ஓட்டங்களாகும்,
இலங்கை அணி முதல் ஓவரிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷல் பெரேராவின் விக்கெட்டை இழந்தது. ஆரம்ப பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோர் அச்சுறுத்தும் வகையில் பந்துவீசினார்கள். நான்காவது ஓவரில் பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்க இலங்கை அணியின் தடுமாற்றம் ஆரம்பித்தது. அதே ஓவரிலேயே சதீர சமரவிக்ரமவும் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் கதை முடிந்தது என்ற நிலை உருவானது. அடுத்த பந்திலேயே சரித் அசலங்க ஆட்டமிழந்தார். 2 பந்துகளில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்தார். ஒரு ஓவரில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார். லசித் மாலிங்காவுக்கு பிறகு ஒரு ஓவரில் நான்கு விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மொஹமட் சிராஜ் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மொஹமட் சிராஜின் அடுத்த ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை அவர் கைப்பற்ற இலங்கை அணி ஆறாவது விக்கெட்டினை இழந்தது, தஸூன் சாணக்க ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். மொஹமட் சிராஜின் முதலாவது ஐந்து விக்கெட் பெறுதியாக இது அமைந்தது. அத்தோடு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 50 விக்கெட்கள் என்ற மைற்கல்லையும் தாண்டினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷல் மென்டிஸ் மற்றும் டுனித் வெல்லாளகே ஆகியோர் இலங்கை அணியை மீட்கும் பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தியா அணியின் பந்துவீச்சாளர்களோ இரக்கமின்றி செயற்படுவது போன்று கடுமையாக தொடர்ந்தும் இறுக்கமாக பந்துவீசினார்கள். 12 ஆவது ஓவரில் குஷல் மென்டிஸ் மொஹமட் சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 33 ஆக காணப்பட்டது.
இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும் 20வயதான இளம் டுனித் வெல்லாளகே நிதானம் கார்த்து நின்று துடுப்பாடிய விதம் பாராட்டுக்குரியது. ஆனலும் ஹார்டிக் பாண்ட்யாவின் பௌன்சர் பந்துக்கு தடுமாறி ஆட்டமிழந்தார். 21 பந்துகளை அவர் எதிர்கொண்டார்.
இந்த நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு துடுப்பாட தெரியாதா என்ற கேள்வியே எழும்பியது. விக்கெட்கள் அடுத்ததடுத்து வீழ்த்தப்பட லீவ் செய்து துடுப்பாடமால் சகல பந்துகளுக்கும் துடுப்பாட்ட பிரயோகம் மேற்கொண்டது ஆட்டமிழப்புகளுக்கு காரணமாக அமைந்தது. 4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்கள் என்ற நிலையில் அணியை மீட்டு எடுப்பது இலகுவானதல்ல. அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை அணியின் கதை முடிந்து போனது. இறுதிப் போட்டி ஒன்றில் இந்தளவு மோசமான துடுப்பாட்டமா என்ற நிலை உருவாகிப்போனது.
இரு அணிகளும் 7 தடவைகள் இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இது எட்டாவது தடவையாகும் . முதலாவது தொடர் குழு நிலை போட்டியாகையால் இறுதிப் போட்டியாக கருதுவதில்லை. 50 ஓவர்கள் போட்டியில் இலங்கை அணி 10 தடவைகளுக்கு, 20-20 தொடரில் ஒரு முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலாவது தொடரில் இலங்கை அணி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. அதனை இறுதிப் போட்டியாக கருதுவதில்லை.
இந்தியா அணி 50 ஓவர்கள் போட்டியில் 8 தடவைகளுக்கு, 20-20 தொடரில் ஒரு தடவையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுளளது. முதலாவது தொடரில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுக் கொண்டது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | பிடி- ரவீந்தர் ஜடேஜா | மொஹமட் ஷிராஜ் | 02 | 04 | 0 | 0 |
குஷல் பெரேரா | பிடி- லோகேஷ் ராகுல் | ஜஸ்பிரிட் பும்ரா | 00 | 02 | 0 | 0 |
குசல் மென்டிஸ் | Bowled | மொஹமட் ஷிராஜ் | 17 | 34 | 3 | 0 |
சதீர சமரவிக்ரம | L.B.W | மொஹமட் ஷிராஜ் | 00 | 02 | 0 | 0 |
சரித் அசலங்க | பிடி- இஷன் கிஷன் | மொஹமட் ஷிராஜ் | 00 | 01 | 0 | 0 |
தனஞ்சய டி சில்வா | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் ஷிராஜ் | 04 | 02 | 1 | 0 |
தஸூன் ஷானக | Bowled | மொஹமட் ஷிராஜ் | 00 | 04 | 0 | 0 |
டுனித் வெல்லாளகே | பிடி- லோகேஷ் ராகுல் | ஹார்டிக் பாண்ட்யா | 08 | 21 | 0 | 0 |
டுஸான் ஹேமந்த | 13 | 15 | 1 | 0 | ||
ப்ரமோட் மதுஷான் | பிடி- விராத் கோலி | ஹார்டிக் பாண்ட்யா | 01 | 06 | 0 | 0 |
மதீஷ பத்திரன | பிடி- இஷன் கிஷன் | ஹார்டிக் பாண்ட்யா | 00 | 01 | 0 | 0 |
உதிரிகள் | 03 | |||||
ஓவர் 15.2 | விக்கெட் 10 | மொத்தம் | 50 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஜஸ்பிரிட் பும்ரா | 05 | 01 | 23 | 01 |
மொஹமட் ஷிராஜ் | 07 | 01 | 21 | 06 |
ஹார்டிக் பாண்ட்யா | 2.2 | 00 | 03 | 03 |
குல்தீப் யாதவ் | 01 | 00 | 01 | 00 |
அணி விபரம்
இலங்கை அணி சார்பாக உபாதையடைந்த மஹீஸ் தீக்ஷணவுக்கு பதிலாக டுஷான் ஹேமந்த இணைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியோடு ஓய்வு வழங்கப்பட்ட இந்தியா வீரர்கள் அனைவரும் இன்றைய போட்டிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இருப்பினும் அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டு வொஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, வொஷிங்கடன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்
இலங்கை
குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க(தலைவர்), டுனித் வெல்லாளகே, டுஸான் ஹேமந்த, மதீஷ பத்திரனே, ப்ரமோட் மதுஷான், சரித் அசலங்க