போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலமாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப் படுத்தவில்லை என குற்றம் சுமத்தியும் போர் முடிந்து பதிநான்கு ஆண்டுகள் ஆனபோதிலும் காணாமற் போனோர் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தும் இன்று(21.09) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

போர்க்குற்றங்களில் ஈடுப்பட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முன் வைத்திருந்தனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

உண்மையைக் கண்டறிந்து , நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் மீனவர்கள் தொடர்ந்தும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும், அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறுகிறது எனவும் இந்த போராட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புக்கள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ,மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிசாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version