யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மூன்று மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 23ஆம் திகதி இரவு தாய் குறித்த குழந்தைக்கு பாலூட்டும் போது பால் புரைக்கேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாய்பால் குழந்தையின் நுரையீரலில் சிக்கியமையினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.