உலகக்கிண்ண தொடரின் பயிற்சிப் போட்டிகள் இன்று இந்தியாவில் ஆரம்பித்தன . இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 68(64) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 55(79) ஓட்டங்களையும், குசல் பெரேரா 34(24) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹெதி ஹசன் 3 விக்கெட்களையும், தன்சிம் ஹசன் ஷகிப், ஷொரிபுல் இஸ்லாம், நசும் அஹமட், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தல ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
குஷல் பெரேரா நல்ல முறையில் துடுப்பாடிய போதும் தோல் மூட்டு உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இது இலங்கை தயார்ப்படுத்தல்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும். பயிற்சிப் போட்டியில் துடுப்பாட்ட இடங்களை மாற்றி துடுப்பாடியிருக்க முடியும். இருப்பினும் அதே இடங்களில் துடுப்பாடினார்கள். போர்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட தஸூன் சாணக இன்று 17 பந்துகளில் 03 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். விக்கெட்கள் வீழ்ந்தால் அடுத்தடுத்து ஆட்டமிழக்கும் இலங்கையின் வழமையான வியாதி இன்றும் இலங்கை அணிக்கு தொற்றிக்கொண்டது.
263 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 42 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது. இதில் ரன்ஷிட் ஹசன் 84 ஓட்டங்களையும், லிட்டோன் டாஸ் 61 ஓட்டங்களையும், மெஹதி ஹசன் மிராஸ் 67 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் குறிப்பிட்டு கூறுமளவுக்கு யாரும் பிரகாசிக்கவில்லை.
பயிற்சிப் போட்டிகளில் வெற்றி தோல்வி முக்கியமில்லை. ஆனால் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபிக்க வேண்டுமென்பது முக்கியம். அதனை இலங்கை அணி செய்ய தவறியுள்ளது.