உலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் இன்று நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற்றுள்ளது. மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகளையும் மழை குழப்பிய நிலையில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகள் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டன.
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. இதில் டெவன் கொன்வே 78 ஓட்டங்களையும், ரொம் லெதாம் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லுங்கி கிடி, மார்க்கோ ஜனேசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள். தென்னாபிரிக்கா அணி துடுப்பாடிய வேளையில் 37 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்ற வேளையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. அந்த வேளையில் இலக்கு 219 ஆக காணப்பட்து. அதன் காரணமாக நியுசிலாந்து அணி டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. குயின்டன் டி கொக் 84 ஓட்டங்களையும், ரசி வன் டேர் மேர்வ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.ரெண்ட் பௌல்டட் 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து மற்றும் பங்காளதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி 37 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 37 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது. இதில் மெஹதி ஹசன் மிராஸ் 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ரன்சிட் ஹசன் 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரீஸ் ரெப்லி 3 விக்கெட்களையும், டேவிட் வில்லி, ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 23.3 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மொயீன் அலி 56 ஓட்டங்களையும், ஜொனி பாஸ்டோவ் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஸ்ரபைஷூர் ரஹ்மான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.