கோதுமை மாவிற்கும் விரைவில் விலைச் சூத்திரம்!

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கோப் குழு அண்மையில் கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் களஞ்சியசாலைகளில் தற்போது உள்ள கோதுமை மாவின் அளவை கணக்கிட்டு 2 மாதங்களுக்குள் கோதுமை மா தொடர்பில் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமை கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவிற்கும் விலை சூத்திரம் இருந்தால், தனிப்பட்ட கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதிலும் உள்ள கடைகளில் கோதுமை மா பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், நிதியமைச்சினால் வழங்கப்பட்ட விலைகளின்படி, ஒரு கிலோ கோதுமை மா 198 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதுடன், தற்போது கோதுமை மாவுக்கான விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகரிப்பினால் விலை அதிகரித்துள்ள போதிலும், அதிகரிக்கப்பட்ட வரி காரணமாக நாட்டில் ஏற்கனவே களஞ்சியசாலைகளில் இருந்த கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாகவும் அது நியாயமானதொன்றல்ல எனவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply