கொழும்பின் பல இடங்களில் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றம், துறைமுக நகரம் மற்றும் கங்காராம உள்ளிட்ட பல பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரால் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வேலையகியுள்ளதாக தினமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் குழுவொன்றே இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் திட்டம் பற்றி அறிந்த பல்லேகல சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர், தன்னகும்புர பொலிஸ் சோதனைச் சாவடியில் குறித்த விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை வீசியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான அவர்களின் உரையாடலைக் கேட்ட கைதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடும் குழுவினரால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டபோது பொலிஸ் சோதனைச் சாவடியில் இந்த பயங்கரவாதத் திட்டம் தொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதம், கைதிகள் தொடர்பான விபரம் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்டவற்றை வீசி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த குற்ற புலனாய்வு பிரிவினர், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கைதிகளை விசாரிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான், சம்பந்தப்பட்ட பிரதேச நீதிமன்றங்களிலிருந்து இது தொடர்பில் தேவையான உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.