நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30.11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேச சமூகம் உத்தியோகபூர்வமாக இணங்கியுள்ளது. அது ஒரு நாடாக நாம் பெற்ற வெற்றி என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நாடு மீண்டும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு சில வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேம்பாலங்கள் அமைக்கும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி புனரமைப்பு பணிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த கடன் தொகை மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த மற்றும் பயணிக்க முடியாத வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி வீதிகள் குறித்து ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அதன்படி, அடுத்த வாரத்திற்குள் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புகையிரதப் பாதைகள், அதிவேகப் பாதைகள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செயற்திறன்மிக்க புகையிரதப் பாதைகளாக மாற்ற, புகையிரத தண்டவாளங்களை நவீனமயப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. குறித்த புகையிரதப் பெட்டிகளுக்கான துறைமுக அபராதத் தொகையை செலுத்திய பின்னர், 123 புகையிரதப் பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அடிப்படையில்தான் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என் வலியுறுத்திய அமைச்சர் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அளவுக்கு நமது நாட்டில் பொருளாதாரப் பலம் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரித்திணைக்களம் உள்ளிட்ட அரச வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தற்போதுள்ள காலாவதியான செயற்பாட்டுப் பொறிமுறையுடன் தொடர்ந்து செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்று இலங்கையை மாற்றுவதற்கு அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகும். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.