கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த தடுப்பு முகாமின் பெண் மேற்பார்வையாளர் எவ்வித தொழிற்பயிற்சியும் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மேற்பார்வையாளர் உரிய பரீட்சைகளில் சித்தியடைந்துள்ள போதிலும் எந்தவொரு தொழிற்பயிற்சியும் பெறவில்லை என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் காணப்படும் சிறுவர் நன்னடத்தை மையங்களில் உள்ள அனைத்து உழியர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமன்றி சிறுவர்களை கையாளும் விதம் தொடர்பில் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.
தடுப்பு காவலில் இருந்த சிறுவன் உடல் நல குறைபாட்டால் உயிரிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போதிலும், தாக்குதலுக்கு உள்ளான நிலையிலே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.