பெருந்தோட்ட மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவினை வழங்குவதாக அமெரிக்க விசேட பிரதிநிதி டிசைரீ கோர்மியர் ஸ்மித் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இன சமத்துவம் மற்றும் நீதிக்கான விசேட பிரதிநிதியான டிசைரீ கோர்மியர் ஸ்மித் நுவரெலியாவிற்கு இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதியிடம் அமைச்சர் எடுத்துரைத்ததுடன், மலையக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பிவரும் சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், மலையக மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சரிடம், அமெரிக்க பிரதிநிதி கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அமெரிக்க தூதரகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆங்கில மொழி பயிற்சி நடவடிக்கையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply