திம்புலாகல திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (13.12) காலை அப்பகுதிக்கு வந்த எம்.பி.யை வழிமறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், சுமார் ஒன்றரை மணி நேரம் வளமண்டி பாலத்திற்கு அருகில் கிராம மக்களின் கூச்சல்களுக்கு மத்தியில் காத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பிட்டியைச் சேர்ந்த சுமனரதன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் சேர்ந்த ஞானானந்த தேரர் உட்பட பெருந்தொகையான கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தகவலறிந்த கரடியனாறு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்டி தமது பயிர்ச்செய்கை நிலத்தை தடை செய்ய வந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.