யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயிலும் 25 வயதான மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்; மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மாணவியின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவிக்கு எந்தவிதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட மருந்து தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.