தேர்தலை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார்..!

2024ஆம் ஆண்டில் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் எனவும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக உள்ளதாக அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு கடந்த வருடம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் 2022ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்த பாதிப்பிலிருந்து நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வீடமைப்பு திட்டத்தையும் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய அரசின் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வீதி அபிவிருத்தி உட்பட பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் பணவீக்கம் குறைவடைந்துள்ள நிலையில் 2023ம் ஆண்டை ஐ விட 2024ஆம் ஆண்டு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படாதிருக்க வேண்டுமென்றால் வரி அதிகரிப்பு கட்டாயம் அவசியம் என கூறிய ஜீவன் தொண்டமான் நீர்க் கட்டணம் தொடர்பான விலை சூத்திரம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அறிமுகப்படுத்தப்படும் உறுதியளித்துள்ளார்.

Social Share

Leave a Reply