சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஊடாக கட்டுப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கமைய, மின்சார சபை ஊழியர்கள் எந்தவொரு காரணத்திற்காவும் சமூக ஊடகங்களில் தமது உத்தியோகபூர்வ தகவல்களை பயன்படுத்த முடியாது.
மின்சார சபையின் இரகசிய தகவல்களை வெளிப்படுத்துவதும் அவதூறு, பாலியல், அரசியல் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் மின்சார சபையின் ஒழுக்க விதிகளுக்கு முரணானவை என சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் கருத்துகளை ஏதேனும் ஒரு ஊழியர் வெளியிடுவது குற்றம் என பதில் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அவ்வாறான தகவல்களை சமூக ஊடகங்களில் தரவேற்றம் செய்தல், இடுகை செய்தல் மற்றும் மீளனுப்பவோ, பகிரவோ கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நற்பெயருக்கு விளைவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக குறித்த சுற்றுநிருபம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.