அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் அடுத்த மாதம் ஆரம்பம்..!

இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

இந்த சவாலான ஆண்டில் வருமானம் மற்றும் செலவுகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும். அதில் 1265 பில்லியன் ரூபா அதாவது 72மூ அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. மேலும், சமுர்த்தி உட்பட வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 506 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வரி வருமானம் இந்த இரண்டு செயல்பாடுகளுக்கு செலவிடவே போதுமானதாக உள்ளது.

மேலும், நாம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டியை செலுத்த 1,065 பில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டும். மேலும், 715 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்காக கடன் பெற்று செலவிடப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் 05 வருடங்களைத் தவிர முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பு எதுவும் இருக்கவில்லை.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 1,550 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. சுங்கத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்க வரிகள் மூலம் 922 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மதுவரித் திணைக்களம் 169 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மோட்டார் வாகன திணைக்களம் 20 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. 219 பில்லியன் ரூபா வரி அல்லாத வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 16 பில்லியன் ரூபா நன்கொடைகளாகப் பெறப்பட்டுள்ளன. பல்வேறு வைப்புத்தொகைகள் மூலம் 303 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply