தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வல அமைச்சரவைக்கு உந்துதல் வழங்கினார் என கடந்த சனிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது உதவி சட்டமா அதிபர் லக்மினி கிரிஹம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். “மருந்து கொள்வனவு செய்யாவிட்டால் மூன்று வாரங்களுக்குள் மருத்துவ துறை வீழ்ச்சியடையும்” என்ற தவறான எச்ச்ரைகையினை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவைக்கு வழங்கி மருந்து கொள்வனவுக்கு தூண்டினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடனுதவி திட்டமீதிப் பணத்தை விரைவில் பயன்படுத்துவதற்கான வழிமுறையை வகுக்க அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) கெஹலிய ரம்புக்வலயின் அறிவுறுத்தலுக்கு இணங்க மறுத்ததை அடுத்து சந்தேக நபர் அவ்வாறு செய்ததாக மேலும் அவர் கூறியுள்ளார்.
தரமற்று மருந்து கொள்வனவு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பிலும், அவற்றை விநியோகம் செய்த நிறுவனம் தொடர்பிலும் முழுமையான விசாரணை ஒன்றை செய்யுமாறு மாளிகாகந்தை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பிழையான தகவல்களை வழங்கி அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியமை, தரமற்ற ஈமோகுளோபின் மருந்துகளை விநியோகம் செய்து நோயாளர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகவும் மேலும் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.