பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறிப்பிட்டமைக்கு நேற்று (17/11) பாராளுமன்றில் கடும் தர்க்கம் ஏற்ப்பட்டது.
பாராளுமன்றில் நேற்று வரவு – செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் மீதான 4ஆம் நாள் விவாதத்தின் போது, திலீபன் எம்.பி உரையாற்றுகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.
அச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனையும் இலங்கையின் சீமான் என விளித்ததுடன் அண்மையில் சுமந்திரன் எம்.பி தனது சொந்த வயல்காணியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டதனையும் கேலிக்குள்ளாக்கினார். அதேவேளை சபையில் இல்லாத சாணக்கியன் எம்.பியை மொஹமட் சாணக்கியன் என்றும் அவர் விளித்தார்.
இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி, ”சபையில் இல்லாத உறுப்பினர் இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியனின் பெயரை மொஹமட் சாணக்கியன் என பெயர் மாற்றி இவர் சொல்கின்றார் என்றால் இவர் கீழ்த்தரமான ஒருவர் என்றும் எந்த தகுதியுமற்ற பாராளுமன்ற உறுப்பினர்” எனவும் சாடினார்.
அத்துடன் திலீபன் எம்.பியின் இந்த கருத்தை பாராளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கைக்கு சபையில் தலைமை தாங்கிய வீரசுமன வீரசினாக், சாணக்கியனின் பெயரை மாற்றிக்கூறிய விடயங்கள் ஹன்சார்ட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.