வட மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் கடிதங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக “எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்” எனும் தொனிப்பொருளில் வடமாகாணத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் பிரச்சாரம் செய்யும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வானது, மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் நடைப்பெற்றது.
வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், குறித்த காணிகளில் வணிக மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், உரிய காணி உரிமையாளர்கள் வாடகை வீடுகளில் வசிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில், பொது மக்களுக்கு காணிகள் தொடர்பில் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டதுடன், மன்னார் தபாலகத்திலிருந்து – ஜனாதிபதி காரியாலயத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.