100 ஆண்டுகளில் இல்லாத கடும் மழை

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை (08/11) சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில், அங்கு கனத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது.

இதில் இந்த ஒட்டுமொத்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இடைவிடாது கொட்டிய கன மழையால் வான்கூவர் நகரிலுள்ள சகல நீர்நிலைகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக கனடாவின் மற்ற பகுதிகளுடன் வான்கூவரை இணைக்கும் சாலைகள் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டதில், அங்குள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி அந்த வழியாக சென்ற வாகனங்கள் பலவும் சிக்குண்டுள்ளன. இதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 2 பேர் காணமற்போயுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலைகளில் சிக்கியிருந்த 300-க்கும் அதிகமானோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். புயல், மழை, வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ள பாதிப்பு குறித்து தலைநகர் ஒட்டாவாவில் ஊடகவியலாளர்களுடன்; உரையாடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டிஷ் கொலம்பியா, கோடையின் தீவிர அனல் காற்றால் 500 க்கும் அதிகமான மக்களை பறிகொடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

100 ஆண்டுகளில் இல்லாத கடும் மழை

Social Share

Leave a Reply