ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நடாத்தப்படும் 4 நாள் தேசிய சுப்பர் லீக் தொடரின் கண்டி அணிக்கு எதிரான போட்டியில் காலி அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் இறுதி நாளான இன்று, 107 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 14ம் திகதி ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இனிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பவந்த வீரசிங்க மற்றும் வனுஜா ஷஹான் ஆகியோர் தலா 56 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் தனஞ்ஜய லக்ஷான் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய காலி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் விஷாட் ரந்திக 80 ஓட்டங்களையும், தனஞ்சய தனஞ்ஜய லக்ஷான் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் நிம்ஷார அதலகள மற்றும் வனுஜா ஷஹான் ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
38 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் உதித் மதுஷான், நிஷான் பீரிஸ் ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், 107 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இனிங்ஸில் களமிறங்கிய காலி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. சங்கீத் குரே, ஒஷாத பெர்னாடோ ஆகியோர் தலா 51 ஓட்டங்களை பெற்றனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. நான்கு நாட்களில் 1000 ஓட்டங்கள் கடந்த போட்டியாக அமைந்து.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் இனிங்ஸிற்காக 491 ஓட்டங்களைப் யாழ் அணி பெற்றுக் கொண்டது.இதில் ரான் சந்திரகுப்தா(128) மற்றும் நிபுன் கருணாநாயக்க(119) சதங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் முதவாவது இனிங்ஸிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 592 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்தியது. நுவனிது பெர்னாண்டோ 180 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டதுடன், கொழும்பு அணி சார்பில் தசுன் ஷாணக்க 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹசித போயகொட 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.