ஆசிரியையை கத்தியால் குத்தி காயப்படுத்திய சக ஆசிரியை!

பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்று (19.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியரிடம் கத்தி ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு ஆசிரியர்கள் இரு பாடசாலைகளில் பணியாற்றும் நண்பர்கள் எனவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சந்தேகநபர் டெனிம் பேண்ட் அணிந்து நேற்று முன்தினம் (18.03) நள்ளிரவு தாக்கப்பட்ட ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகள் சந்தேக நபரை பிடித்து வைத்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரமே இந்தக் குற்றத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளைப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த மற்றும் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ரத்நாயக்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version