நிபந்தனைகளை மீறித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைமடித் வலைத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுகின்ற குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்களுடன நேற்று (26/12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அதுகுறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘இழுவைமடி வலைத் தொழில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் ஒன்றாகும். இருப்பினும் உள்ளூர் மீனவர்களின் நலன் கருதி குறித்த சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதுவரையில், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரம் நிபந்தனைகளின் அடிப்படையில் தொழிலில் ஈடுபட முடியும்.
ஆனால், நிபந்தனைகளை மீறி, ஏனைய தொழிலாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் கிடைக்கின்றன.
குறித்த நிபந்தனைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுiமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவ்வாறானவர்கள் தொழிலில் ஈடுபட முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.