இந்தியாவின் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் இன்று(20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாஜகவில் இணைந்தார். அதிகாரத்தை விட்டு விட்டு மக்கள் பணியாற்றுவதற்காக மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெலுங்கானா, புதுச்சேரியில் ஆளுநராக பணியாற்றிய தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார். இந்திய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்துள்ளார்.
இதன்போது நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் தமிழிசை செளந்தரராஜனுக்கு கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வழங்கிவைத்தார்.
ஆளுநர் பதவி ராஜினாமா என்னும் கடினமான தீர்மானத்தை விருப்பத்துடன் எடுத்திருப்பதாகவும், கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.