பஞ்சாப் அணிக்கு இறுதி ஓவரில் வெற்றி..! 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

புதிய மைதானமான இந்தியாவின் முள்ளன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் ஆரம்ப வீரர்கள் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்திருந்தனர். வார்னர் 21 பந்துகளில் 29 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 20 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 25 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

விபத்தின் காரணமாக காயமடைந்து, ஒரு வருட காலத்திற்கு அதிகமான இடைவெளியின் பின்னர் மீண்டும் அணித் தலைவராக களமிறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 18 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

அணியின் ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்ததுடன், அக்சர் படேலின் 21 ஓட்டங்கள் மற்றும் சூப்பர் சப்பாக(Super Sub) களமிறங்கிய அபிஷேக் போரலின்  அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அபிஷேக் போரல் 10 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

175 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட  ஆரம்பித்த பஞ்சாப் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவான் 22 ஓட்டங்களையும் பிரப்சிம்ரன் சிங் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 2 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை பெற்றிருந்த போது, காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்தமை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

பஞ்சாப் ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அரை சதம் கடந்த சாம் கர்ரன் அணியை இறுதி வரை கொண்டு சென்றார். சாம் கர்ரன் 47 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றிருந்த போது 19வது ஓவரில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். 

போட்டியில் வெற்றி பெறுவதற்கு இறுதி ஓவரில் 6 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்த போது, ஓவரின் இரண்டாவது பந்தில் லியாம் லிவிங்ஸ்டன் 6 ஓட்டங்களை அடித்து, அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். 

லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இத்னபடி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் தேர்வு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply