பெங்களூரு இரசிகர்களை ஆரவாரப்படுத்திய தினேஷ் கார்த்திக்…

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 6வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளினால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியீட்டியது. 

பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு தவான் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். தவான், 37 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்ததன் பின்னர் களத்திற்கு வந்த ஏனைய வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், அதிகளவு ஓட்டங்களை பெறமுடியவில்லை. 

ஜிதேஷ் 27 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் 25 ஓட்டங்களையும், சாம் கரன் 23 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர். 

இறுதி ஓவரில் சஷாங் சிங்கின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சஷாங் சிங் ஆட்டமிழக்காமல் 8 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் சிராஜ் மற்றும் மெக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

177 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தவிர ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். 

விராட் கோலி 77 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 16வது ஓவரில் ஹர்ஷல் பட்டேலின்  பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

சூப்பர் சப்பாக(Super Sub) களத்திற்கு வந்த மஹிபால் லோம்ரோருடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்திக் பெங்களூரு அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றார். 

4 பந்துகள் மாத்திரம் மீதமிருக்க பெங்களூரு அணி வெற்றி இலக்கை கடந்தது. 

தினேஷ் கார்திக் 10 பந்துகளில் 28 ஓட்டங்களையும் மஹிபால் லோம்ரோர் 8 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பந்து வீச்சில் ரபாடா மற்றும் ஹர்ப்ரீத் பிரார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply