சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டம்…

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சி காலத்தில் பாடசாலை சீருடை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தற்போது அந்த மதிய உணவை ஆரம்பப் பிரிவு வகுப்புகளில் உள்ள பிள்ளைகளுக்கு மட்டுமே வழங்குகிறது. பிள்ளைகளை ஒருபோதும் வேறுபடுத்த முடியாது. மதிய உணவு திட்டம் பாடசாலைக்கு இன்றியமையாத திட்டமாகும். இதன் மூலம் பிள்ளைகள் போஷாக்கு பெற்று சிந்தனை மற்றும் அறிவுத்திறன் பெறுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வறிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் வகுப்பறையில் மயங்கி விழுகின்றனர்.  நாட்டிலுள்ள 10126 அரச பாடசாலைகளில் 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, ஆரம்பப் பிரிவு பிள்ளைகளை மட்டும் பிரித்து மதிய உணவு வழங்குவது வேதனைக்குரியது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ்,87 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ், இரத்தினபுரி, ரக்வான, கொடகவெல ராகுல தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(26) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எதிர்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்கு தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் சஜித் பிரேமதாச நன்கொடையாக வழங்கி வைத்தார்.

அரசியல் ரீதியாக பொறாமைத்தனம் கொண்ட சிலர் எமது சேவைகளை விமர்சிக்கின்றனர். அவர்கள் சம்பிரதாய அரசியலை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களை நோக்கி விரல் நீட்டலாம், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கி அவர்களால் விரல் நீட்ட முடியாது. தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இன்றியே நாட்டிற்கு பெறுமானம் சேர்த்துள்ளது. அரச அதிகாரம் கிடைத்த பின்னரும், பரோபகாரர்களை இணைத்துக் கொண்டு, அரசாங்க செலவினங்களுக்கு மேலதிகமாக கல்வியை மேம்படுத்தும் புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பஸ் வழங்குவது தனக்கு பிரச்சினை இல்லையென்றாலும், நாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினையால் பஸ் இறக்குமதி மந்தமாகவே இடம்பெற்று வருகிறது. இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் குறைவு. திருட்டு, மோசடி, இலஞ்சம் போன்றவற்றில் தான் ஈடுபடாததால், இதுபோன்ற பேருந்துகளை நன்கொடையாக வழங்க ஏராளமான பரோபகாரர்கள் உள்ளனர். எனவே முடிந்த ஒவ்வொரு கணமும் பாடசாலைக் கல்விக்கு பெறுமதி சேர்க்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். 

இந்நாட்டின் வரலாற்றில் எந்தக் காலத்திலும் எதிர்க்கட்சிகள் அபிவிருத்தியின் மூலம் நாட்டுக்கு பெறுமானம் சேர்த்ததில்லை, ஆனால் இந்த முறைமை மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்தது. இதற்குப் பிறகு நியமனாகும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பிறகு வரும் எதிர்க்கட்சித் தலைவர்களால் வெறும் வீராப்பு பேசும் சம்பிரதாய அரசியலை செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply