பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரிடம் கோஷங்கள் இல்லாததால், அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன, தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் பலம் ஜனாதிபதி தலைமையிலான அணிக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,
“ஓரிரு சம்பவங்களால் இந்த நாடு வங்குரோத்தாகவில்லை. இந்த நிலை நீண்ட கால காரணங்களால் உருவாகியது. நாட்டில் நீண்ட காலமாக யுத்தம் இடம்பெற்றது. யுத்தத்திற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் நாட்டின் நிதியில் மூலமே கொள்வனவு செய்யப்பட்டன. அதன்படி முப்பது வருடங்கள் யுத்தம் செய்தோம். முப்பது வருடகால யுத்தத்தினால் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. மேலும், 1971 இல், டிரில்லியன் டொலர் பணம் அழிக்கப்பட்டது.
1987 மற்றும் 1988 இல் ஏற்பட்ட பயங்கரமான சூழ்நிலையால் ஏராளமான உயிர்கள் அழிக்கப்பட்டன. மேலும் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டது. பௌத்த தேரர்கள், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவும் கொல்லப்பட்டார்.ஏராளமான ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் மிகவும் திறமையான தோட்ட முகாமையாளர்களை நாடு இழந்தது.
இந்த நிலையில்தான் நாம் சண்டை பிடித்துக்கொண்டது போதும்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து கருத்து வேறுபாடுகளை களைந்து தேசியக் கொள்கைகளுக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரையொன்றை முன்வைத்தார்.
இப்போதும் அது பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களில் தேசிய கொள்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நிதிக் கட்டுப்பாட்டு சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன.
பணப் பயன்பாட்டையும் சட்ட கட்டமைப்பில் சேர்த்துள்ளோம். எனவே, திருடன், திருடன் என்று யாருக்கும் சொல்ல முடியாது. அனைவருக்கும் சமமான சட்டத்தை அமுல்படுத்துவதே எமது நோக்கம் என்பதை கூற வேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பில் மேலும் சில விசேட சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கை வங்குரோத்தானதை அடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனி பணத்தை அச்சிட முடியாது என்று அறிவித்தார். ஆனால் விருப்பமின்றியேனும் நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எத்தனை சிரமங்கள் இருந்தாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மறக்கவில்லை. அஸ்வெசும பலன்கள் ரூ.15000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்நாட்டில் இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் உறுமய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான பணிகளை செய்தார். ஆறு வருடங்கள் மற்றும் பன்னிரண்டு வருடங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதிகளிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் அனைவரையும் விட தற்போதைய ஜனாதிபதி இந்த குறுகிய காலத்தில் செயற்பட்ட விதத்தை வேறு எந்த ஜனாதிபதியாலும் ஈடு செய்ய முடியாது. அந்த ஜனாதிபதிகள் வங்குரோத்தான நாட்டில் செயற்படவில்லை. இதன் காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது அனைவரும் அவரைப் பலப்படுத்தி ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் அவரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். இந்தப் பயணம் மாறினால், மீண்டும் பெற்றோல், கேஸ் சிலிண்டர்களுடன் வீதியில் வரிசையில் நிற்கும் யுகம் மீண்டும் உருவாகும். எனவே, மக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
நாட்டில் தற்போதைய அரசியல் செயற்பாடுகளை சீர்குலைத்து வெறுப்பு அரசியலில் ஈடுபடும் குழுக்கள் உள்ளன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சகல சக்திகளிலிருந்தும் இலங்கையை விடுவித்து, ஆசியாவின் வளர்ந்த நாடாக உயர்த்த வேண்டுமானால், இந்நாட்டின் பொதுமக்கள் இவ்விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டும்.
அரசியலமைப்பின்படி ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன்பின்னர் அரசியலமைப்பின்படி பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை ஒத்திவைப்பதற்காக தேர்தல் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. கோஷங்கள் இல்லாததால் தான் தேர்தலை நடத்துவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாட்டின் வங்குரோத்து நிலை நீக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இப்போது கோஷங்கள் இல்லாமல் போய்விட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இம்முறை புத்தாண்டை கொண்டாடும் சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார். அவர் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பியுள்ளார். அவர் அனைத்து மக்களின் நன்றிக்கு தகுதியானவர்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.