கோலியை மாத்திரம் நம்பியிருக்கும் பெங்களூரு அணி? 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இன்று(29) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த கோலி 59 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

இந்த போட்டியிலும் இறுதி ஓவர்களின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

மேலும், கிரீன் 33 ஓட்டங்களையும் மெக்‌ஸ்வெல் 28 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா மற்றும் ரஸ்ஸல் தலா 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டனர். 

183 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பில் சொல்ட் 30 ஓட்டங்களையும், சுனில் நரைன் 47 ஓட்டங்களையும் பெற்று, அணிக்கு அதிராடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். 

வெங்டேஷ் ஐயர் அரைசதத்தை பெற்றுக் கொள்ள, அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 

அதன்படி, கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. 

வெங்டேஷ் ஐயர் 50 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில், பெங்களூரு அணியின் ஏனைய வீரர்கள் அதிகளவு  ஓட்டங்களை  வழங்க, விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். 

இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 10 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய முதல் அணியாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பதிவாகியது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா அணியின்  வெங்டேஷ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply