மெத்தியுசை மீண்டும் எதிர்கொள்ளவுள்ள ஷகிப் அல் ஹசன்..!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2வது இறுதியுமான போட்டி இன்று(30) நடைபெறவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியிருந்தது. 

இந்நிலையில் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் இலங்கை அணியும், தொடரை சமன் செய்யும் நோக்குடன் பங்களாதேஷ் அணி இன்று களமிறங்கவுள்ளனர். 

முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இரு இன்னிங்கஸ்களும் உள்ளடங்களாக, பங்களாதேஷ் அணியின் 20 விக்கெட்டுகளையும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தார்கள். 

இருப்பினும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள சொட்டோகிராம் மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இலங்கை அணியில், கசுன் ராஜித உபாதை காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளமையினால், அவருக்கு பதிலாக இலங்கை குழாமில் அசித பெர்னாண்டோ  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

பங்களாதேஷ் அணி சார்பில், முன்னாள் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஷகிப் அல் ஹசன் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் களமிறங்கும் போட்டி இதுவாகும். 

மேலும், உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மெத்தியுஸ் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்த சம்பவத்தின் பின்னர், ஷகிப் அல் ஹசன் இலங்கை அணியை எதிர்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகும். 

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி, காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply