பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் விலகியுள்ளார்.
தினேஷ் சந்திமாலின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசர நிலையின் காரணமாக அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தினேஷ் சந்திமாலுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினேஷ் சந்திமால் உடனடியாக நாடு திரும்புவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதலாவது இன்னிங்ஸின் போது சந்திமால் 59 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்திருந்தார்.
511 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி மதிய உணவு இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் போது, விக்கெட் இழப்பின்றி 31 ஓட்டங்களை பெற்றிருந்தது.