கொரோனா தொற்று நிலைமையை மனதில் கொண்டு, மாவீரர்களை நம் சொந்த இடங்களில் விளக்கு ஏற்றி மனதார நினைவு கூர வேண்டும் என தான் வேண்டுகோள் விடுப்பதாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போரில் உயிர் நீத்த வீரர்களின் ஆத்மாக்களை நினைவு கூறுவதை இலங்கை அரசு தடை செய்து வருவதாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் ஆத்மாக்களை நினைவு கூருவதை தடுப்பது, போர்க்களத்தை விட தமிழ் மக்களின் நெஞ்சில் ரணத்தை எரியவிடுவதாக இருக்கிறது எனவும் மாவை சேனாதிராசா தனது கவலையினை வெளியிட்டுள்ளார்.
“கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று காலத்தில் தமிழ் மக்களின் நிலங்களில் இனக் கலவரங்களின் போது இலட்சக்கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. அதில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறுவதால் நாம் ஆறுதல் பெறுகிறோம்.
இதனை நாகரீக உலகம் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கிறது. அரசுகள் அங்கீகாரம் வழங்கி வருகின்றன. கடந்த அரசு அந்த நாகரீகத்த்தை கடைப்பிடித்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றமடைகிறது. மத நம்பிக்கை உள்ளவர்கள் ஆத்மா சாந்தி பிரார்த்தனைகளையும், கடமைகளையும் செய்து வருகின்றனர்.
இறந்த இராணுவ வீரர்களை மட்டும் இலங்கை அரசாங்கம், பாராளுமன்ற வளாகத்தில் நினைவு கூறி வருகிறது. எனினும் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுகூடி தமது வீரர்களை நினைவு கூற அங்கு மனித உரிமை மறுக்கப்படுகிறது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் நீதிமன்றங்கள் மூலம் இந்த செயற்பாடுகளுக்கு தடையுத்தரவை பெறுகின்றனர். அரசாங்கம் தடைடயினை பிறப்பிக்கிறது. ஆகவே இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஜனநாயக வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை காட்ட வேண்டும் எனவும் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.