இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை, மக்கள் அச்சத்தில் 

இந்தோனேசியாவின் ருவாங் தீவில் உள்ள எரிமலை வெடித்துள்ளதால் , இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடித்துள்ள எரிமலையின் பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ருவாங் தீவில் உள்ள எரிமலை பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு இந்தோனேசிய அதிகாரிகள் நேற்று(17)  உத்தரவிட்டுள்ளனர். 

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியின் பகுதியின் ருவாங் தீவில் உள்ள 725 மீட்டர் (2,400 அடி) கூம்பு வடிவ அடுக்கு எரிமலை, கடந்த 16ம் திகதி இரவு முதல் சுமார் ஐந்து முறை வெடிப்புக்குள்ளாகியுள்ளது. 

இதன் காரணமாக எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் வானத்தில் ஆயிரக்கணக்கான அடிகள் பரவியுள்ளதாக அந்நாட்டின் எரிமலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், வெடிப்புக்குள்ளாகியுள்ள ருவாங் எரிமலையின் பகுதிகள் தண்ணீரில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, குறித்த பகுதியின் 6 கிலோமீட்டர் தூரத்திற்குள் மக்களை செல்ல வேண்டாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

1871ம் ஆண்டு இதுபோன்று ருவாங் தீவில் உள்ள எரிமலை வெடித்ததால், அப் பகுதியில் சுனாமி ஏற்பட்டிருந்தது. 

சுனாமி எச்சரிக்கையின் காரணமாக ருவாங் தீவில் வசிக்கும் சுமார் 800 மக்கள் வேறொரு தீவுக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.  

கடந்த 2018ம் ஆண்டும் இந்தோனேசியாவின் அனக் கிரகட்டாவ் எரிமலை வெடித்து கடலில் விழ்ந்ததால், ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளின் கரையோரங்களை சுனாமி தாக்கியதன் காரணமாக 400 மேற்பட்ட மக்கள் உயிரிழந்தமையும்  சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply