ரஷ்ய இராணுவத்தில் இலங்கையர்கள், பாராளுமன்றத்தில் விசேட உரை 

ரஷ்யா மற்றும் உக்ரைனில் இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை(25.04) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட உரையாற்றவுள்ளார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(24.04) தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவருடைய கேள்விக்கு பதில் வழங்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி நாட்டிலிருந்து அழைத்து செல்லப்படும் மக்கள், வேறு வேலைகளுக்குப் பதிலாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த மோசடி தொடர்பில் பொலிஸாரும் வெளிவிவகார அமைச்சும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ரஷ்யா மற்றும் உக்ரைனில் வேலை வழங்கிதருவதாக கூறி தனிநபரிடமிருந்து சுமார் 1.8 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டு வருவதாகவும்  நீதி அமைச்சர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply