ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பிரதம செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் குறித்த பதவிகளில் செயற்படுவதற்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் வித்தானவினால் இன்று(24.04) இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
விஜேதாச ராஜபக்ஷ மற்றும் துஷ்மந்த மித்ரபால சுதந்திர கட்சியின் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக்க ஜயசுந்தர நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு கட்சியின் உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வகிப்பது கட்சி யாப்பிற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் குறித்த பதவிகளுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நிறைவேற்றுக்குழு கூட்டம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.