மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் அபுதாபியில் நேற்று(25.04) ஆரம்பமானது.
தகுதிகாண் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் ஹசினி பெரேரா மற்றும் நிலக்ஷிகா சில்வா ஆகியோர் தலா 29 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
123 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து அணி 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் இனோஷி பிரியதர்ஷினி 3 விக்கெட்டுகளையும், உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்டுகளையும் அதிகப்பட்சமாக கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகியாக இனோஷி பிரியதர்ஷினி தெரிவு செய்யப்பட்டார்.
மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி பங்குபற்றும் அடுத்த போட்டி எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி ஸ்கொட்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.