“மக்கள் குறைகேள்” செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் அரசாங்க அதிபர் கனகேஸ்வரன்
ஜோஸப்வாஸ் நகருக்கு நேற்று (25) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அரசாங்க அதிபர்,
விளையாட்டு மைதானம், ஆலய வளாகம், கிராமத்தின் வீதிகள்,மற்றும் முதியோர் சங்கம் போன்றவற்றை பார்வையிட்டார்.
இந்த பகுதியில் சுமார் 25 வருடங்களாக வாழ்ந்து வரும் 400 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போதிய
வசதிகள் இன்மையால் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.உரிய வசதிக்கான தேவைப்பாடுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
குறித்த கிராமத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்,
விளையாட்டு வீரர்கள் என பலரும் வசித்து வரும் இந்த நகரில் உரிய வசதிகள் இன்மை குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் குறைகளைக் கேட்டறிந்த அரசாங்க அதிபர் விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
பங்குத் தந்தை அருட்பணி இராஜநாயகம் அடிகளாரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்,
மாவட்ட உதவிச் செயலாளர், டிலுஷன் பயஸ்,மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திவாகரி,மன்னார் மறை
மாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர், அருட்பணி, விக்டர் சோசை அடிகளார், அருட்பணி டெனிக்கலிஸ்ரஸ்
அடிகளார்,அருட்பணி டெஸ்மன் அஞ்சலோ அடிகளார்,கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி அலுவலர்கள்,
சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கிராமத்திற்கு முதன் முறையாக விஜயம் செய்ததன் ஞாபகார்த்தமாக அரச அதிபருக்கு
நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது .
ரோகினி நிஷாந்தன்