NPL 2024- வட மாகாண கிரிக்கெட் தொடர் கோலா கல ஆரம்பம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்த வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடர் வட மாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை வவுனியா நகரசபை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அணிகள் பங்குபற்றும் நொதேர்ன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை இரண்டாவது முறையாக வட மாகாண கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. Vavuniya Vikings, Jaffna Gladiators, Mullai Panthers, Kilinochi Fighters, Mannar Kings எனும் பெயர்களில் மாவட்ட அணிகள் மோதுகின்ற இந்த தொடரில் யாழ் மற்றும் முல்லைத்தீவு அணிகள் முதற் போட்டியில் விளையாடுகின்றன.

வட மாகாண கிரிக்கெட் சங்கம், வவுனியா மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் யோகேந்திரன் ரதீபன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். ஐந்து அணிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டன.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பித்த இந்த தொடர் மே 19 ஆம் திகதி வரை வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக தினமும் இரண்டு போட்டிகள் என்ற அடிப்படையில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட அணிகள் மோதும் இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை பார்வையிடவும் உங்கள் அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் பார்வையாளர்களை மைதானத்துக்கு வட மாகாண கிரிக்கெட் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் யோகேந்திரன் ரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறான கிரிக்கெட் தொடர்கள் வட மாகாண வீரர்களையும் அவர்களது விளையாட்டு திறமைகளையும் மேம்படுத்த நிச்சயம் கைகொடுக்கும். அண்மைக்காலமாக யாழ்ப்பாண வீரர்கள் தேசிய ரீதியியில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறன நிலையில் ஏனைய மாவட்ட வீரர்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையவுள்ளது

Social Share

Leave a Reply