உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை எனவும், இத்தகைய நிலை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
Air India, BOAC மற்றும் Swiss Airlines போன்ற செல்வந்த நாடுகளிலுள்ள விமான நிறுவனங்களும் இலாபம் ஈட்டவில்லை என்றும் சில நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் இன்று(08.05) எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நட்டம் காரணமாக Air India நிறுவனம், இந்தியாவின் TATA நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், Emirates நிறுவனத்திற்கு வருடந்தோறும் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அந்நாட்டு அரசாங்கம் வழங்கிவருவதாகவும் விமானச் சேவைகள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய இலங்கை போன்ற சிறிய நாடு விமானச் சேவையைப் பராமரிக்கும் நிலையில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தில் உள்ள 6,000 ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிசெய்ய, பாரிய முதலீட்டை வழங்கக் கூடிய நிறுவனத்துடன் இணைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் 609 பில்லியன் நட்டத்தில் இயங்கிய போது, குறித்த நிறுவனத்திற்குப் புதிதாக 791 பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இதுவாகும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் இன்று(08.05) சுட்டிக்காட்டினார்.
கடந்த வருடம் ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 474 பணியாளர்கள் இராஜினாமா செய்திருந்தமையினால், புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.