நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த டயானாவுக்கு வாய்ப்பு?  

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை சவாலுக்கு உட்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

டயானா கமகேவுக்கு எதிராக வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை, பூரண உயர் நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

குறித்த தீர்ப்பு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் மூவரடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்பதால், அதனை பூரண நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் நேற்று (08.05) தீர்ப்பளித்தது. சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவிற்கமையவே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், டயானா கமகேவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்த முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் தேசியப்பட்டியலின் ஊடாக  பாராளுமன்றத்திற்கு வருகை தரலாம். 

ஆகவே, வழங்கப்பட்ட தீர்ப்பு சவாலுக்கு உட்படுத்தப்படுமா அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படுமா, இவற்றுள் எந்த செயற்பாடு முதலில் முன்னெடுக்கப்படும் என்பது பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்த டயானா கமகேவிற்கு பதிலாக, அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், பாராளுமன்றத்தில் உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதியில்லை என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் டயானா கமகேவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டப்பூர்வத்தன்மையை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பிற்கமைய இலங்கை பிரஜையல்லாத டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட சம்பளத்தினை மோசடியாகவே கருதமுடியும். 

இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினராக டயானா கமேக பெற்றுக்கொண்ட சம்பளத்தினை மீளப் பெற்றுக்கொள்ளவதற்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Social Share

Leave a Reply