இவ்வருடத்தில் 37 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 37 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் கலால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அவற்றுள் 16 அனுமதிப் பத்திரங்கள் பல்பொருள் அங்காடிகளுக்கு(super markets) வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர பாராளுமன்றத்தில் இன்று(09.05) எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 214 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 147 அனுமதிப் பத்திரங்கள் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சனத்தொகை விகிதத்திற்கமையவே மதுபான அனுமதிப் பத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அதற்கமைய இவ்வாண்டில் 1,578 மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அதற்கமைய மேலும் 474 மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர பாராளுமன்றத்தில் இன்று(09.08) கேள்வி எழுப்பினார்.

மது வரித் திணைக்களத்தினால் மதுபான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான 1,008 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மதுபான அனுமதிப் பத்திரம் சந்தையில் 30 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்கள், பல்பொருள் அங்காடிகளுக்கு(super markets) வழங்கப்படுவதாகத் தெரிவித்த ஜயந்த சமரவீர, அரசாங்கத்திற்கு வருமானம் கிடைப்பதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதிகளவு மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் நிலையில், 2022ம் ஆண்டும் ஒப்பிடும் போது 2023ம் ஆண்டில் நாட்டில் மது பாவனை 19 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply