இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 41 வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நேற்று(10.05) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வீரர்களின் ஆட்டத்திறனுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சமநிலை அல்லது தோல்விக்கு அமைய கட்டண முறைகள் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான போட்டிக் கட்டணமும் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒப்பந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, ஆறு பிரிவுகளின் கீழ் 41 வீரர்கள் புதிய ஒப்பந்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த முறை ஒப்பந்தத்தில் 29 வீரர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இம்முறை ஒப்பந்தத்தில், ஷெவோன் டேனியல், துஷான் ஹேமந்த, நுவிந்து பெர்னாண்டோ மற்றும் சஹான் ஆராச்சிகே போன்ற புதுமுக வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளடங்களாக 18 வீரர்கள் புதிதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒப்பந்தத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். 

கடந்த முறை ஒப்பந்த்தில் காணப்பட்ட வீரர்களுள், பானுக்க ராஜபக்‌ஷ, தனுஷ்க குணதிலக, லாஹிரு குமார, நுவன் பிரதீப், மினோத் பானுக்க மற்றும் லக்‌ஷான் சந்தகன் போன்ற வீரர்கள் புதிய ஓப்பந்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் இடம் பெறும் வீரர்களுக்கு அங்கீகரிக்கும் வகையில், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 41 வீரர்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version