சஜித் பிரேமதாசவின் தொழிலாளர் தினச்செய்தி

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் பல்லாயிரக்கணக்கான சகோதர “உழைக்கும் மக்களுக்கு” வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

1886 மே 4 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை நாளுக்காக நடத்திய போராட்டம் அல்லது ‘ஹேமார்க்கெட் போராட்டம்’ உலகின் முதல் தொழிலாளர் போராட்டமாகக் கருதப்படுகிறது.

இந்தப் போராட்டமே உலகெங்கிலும் மே தினம் அல்லது தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அன்று முதல் உலகெங்கிலும் வாழும் அனைத்து உழைக்கும் மக்களும் மே 1 ஆம் திகதியை உலக தொழிலாளர் தினமாக சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

ஒரு நாடாக, நமது நாடும் தற்போது பல பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. மக்கள் முறைமையில் மாற்றத்தை எதிர்பார்த்து பெரும் ஆணையுடன் புதிய அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தேர்ந்தெடுத்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தாலும் ஜனாதிபதியாலும் நாட்டின் உழைக்கும் மக்களுக்காக எந்த நேர்மறையான சேவையும் செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.

முந்தைய அரசாங்கமும் ஜனாதிபதியும் உருவாக்கிய IMF ஒப்பந்தத்தின்படி, உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பு செய்யும்போது, பெரும் கோடீஸ்வரர்களைப் பாதுகாத்து, உழைக்கும் மக்களின் ஓய்வூதிய நிதிகள் மீது ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு தற்போதைய அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்காதது ஆச்சரியமான விடயம்.

உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி செயல்படுவதை நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்குச் செய்த பெரும் அவமரியாதையாகக் கருதுகிறேன்.

அதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நமது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்துள்ள 44% எதிர்வினைத் தீர்வை காரணமாக, நமது நாட்டின் பல ஏற்றுமதித் தொழில்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன. இந்தத் தீர்வை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், ஒருவேளை இந்தத் தீர்வை விதிக்கப்பட்டால், நமது நாட்டின் ஏற்றுமதித் தொழில்கள் சீரழிந்து, பலரது வேலைவாய்ப்புகளும் இழக்கப்படலாம். இந்த முறை நாம் தொழிலாளர் தினத்தை இத்தகைய பல நெருக்கடிகளின் மத்தியில் கொண்டாடுகிறோம்.

எனவே, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் கைகோர்த்து முதலில் இந்த அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும். இல்லையெனில், ஒரு நாடாக, ஒரு தேசமாக நாம் மீண்டும் எழுந்து நிற்க முடியாது.

தொழிலாளர் உரிமைகளை வெறும் தாளில் மட்டுமல்லாமல் உண்மையாகவே பாதுகாக்கும் காலகட்டத்திற்காக நாம் அனைவரும் அணிதிரள்வோம்” என்றார்.

Social Share
FacebookTwitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version