இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.
பெங்களூரில் இன்று(12.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பெங்களூரு அணி சார்பில் ராஜட் பட்டிதர் 52 ஓட்டங்களையும், வில் ஜெக்ஸ் 41 ஓட்டங்களையும், கமரூன் கிரீன் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் கலீல் அஹமட், ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
188 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. டெல்லி அணி சார்பில் அணித் தலைவர் அக்சர் படேல் 57 ஓட்டங்களையும், ஹாய் ஹோப் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூரு அணி சார்பில் பந்து வீச்சில் யாஷ் தயால் 3 விக்கெட்டுகளையும், லோகி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் பெங்களூரு அணி 47 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூரு அணியின் கமரூன் கிரீன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய பெங்களூரு அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், டெல்லி அணி 12 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் உள்ளது.