RCBயின் 11 வருட சாதனையை முறையடித்த ஐதராபாத் அணி..! 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 8வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று(27) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.  

277 ஓட்டங்கள், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அணியொன்று பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாகும். 

இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு, 263 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சாதனை 11 வருடங்களின் பின்னர் முறையடிக்கப்பட்டுள்ளது. 

ஐதராபாத் அணி சார்பில் ஹென்ரிச் கிளாசென் 80 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 63 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 62 ஓட்டங்களையும் மற்றும் எய்டன் மர்கம் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.  

278 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி இமாலய இலக்கை அடைவதற்கு முயற்சித்த போதும், மும்பை அணியால் 20 ஓவர் நிறைவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

மும்பை அணி சார்பில் திலக் வர்மா 64 ஓட்டங்களையும், டிம் டேவிட் 42 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 34 ஓட்டங்களையும் மற்றும் நமன் தீர் 30 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பந்துவீச்சில் ஜெயதேவ் உனட்கட் மற்றும் அணித் தலைவர் பெட் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர். 

இந்த போட்டியில் இரு அணிகளும் பெற்றுக் கொண்ட மொத்த ஓட்ட எண்ணிக்கையான 523 ஓட்டங்களே, இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியொன்றில்  பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். 

Social Share

Leave a Reply